தேசிய செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் புறக்கணித்தது; எங்களுக்கு அது அஷ்டலட்சுமி: பிரதமர் மோடி பேச்சு

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளான இன்று, தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

கவுகாத்தி,

அசாமில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் கூட்டத்தில் பேசும்போது, நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட் தாக்கலான பின்னர் அசாமுக்கான தன்னுடைய முதல் பயணம் இதுவாகும் என குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. எங்களுக்கு அது முன்னுரிமையானது. அதன் முன்னேற்றத்திற்காக எங்களை அர்ப்பணித்து இருக்கிறோம். வடகிழக்கு மாநிலங்கள் எங்களுடைய அஷ்டலட்சுமி ஆகும்.

பொருளாதார ரீதியாக வடகிழக்கு மாநிலங்கள் தற்சார்புடன் இருக்கும் வகையில், அதற்கான பணிகளில் நாங்கள் வலுவாக கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் கருத மறுத்து விட்டது. அன்னை இந்தியாவுக்கு சிறிய மதிப்பை கூட காட்டாதவர்கள், நாட்டு நலனுக்காக ஒருபோதும் பணியாற்ற மாட்டார்கள் என்று பேசினார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளான இன்று, தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பா.ஜ.க. தொண்டராக இருப்பதே தன்னுடைய வாழ்வின் மிக பெரிய கவுரவம் என்றும் அவர் கூறினார். நடப்பு ஆண்டின் முதல் பாதியில், 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது.