தேசிய செய்திகள்

விற்பனை விலை உயராது: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்வு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இது கச்சா எண்ணெய் விலை சரிவுடன் சரிசெய்யப்படுவதால் விற்பனை விலையில் மாற்றம் இருக்காது. இந்த வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை அதற்கேற்ப குறைக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு நேற்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக உயர்த்தியது.

இதுதொடர்பாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.8 ஆக நிர்ண யிக்கப்படுகிறது. டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.4 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. கூடுதலாக சாலை வரியும் லிட்டருக்கு தலா ரூ.1 உயர்த்தப்பட்டு ரூ.10 ஆக நிர்ணயிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து மொத்தமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98-ம், டீசலுக்கு ரூ.18.83-ம் கலால் வரியாக வசூலிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரியாக ரூ.9.48-ம், டீசலுக்கு ரூ.3.56-ம் வசூலிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வரி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி கூடுதல் வருவாயாக கிடைக்கும். இந்த நிதி ஆண்டில் எஞ்சியுள்ள 3 வாரங்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சற்று குறைவாக கிடைக்கும்.

இந்த வரி உயர்வு சமீபத்தில் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை சரிவு மூலம் சரிசெய்யப்படுகிறது. இதனால் விற்பனை விலையில் உயர்வு இருக்காது என்று அதிகாரிகள் கூறினர்.

தினசரி விலை மாற்றம் அடிப்படையில் டெல்லியில் பெட்ரோல் விலை 13 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.69.87 ஆகவும், டீசல் 16 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.62.58 ஆகவும் உள்ளது.

2014-ம் ஆண்டு நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி வரை மத்திய அரசு இதேபோல கச்சா எண்ணெய் விலை சரிவின் ஆதாயத்தை 9 முறை கலால் வரியை உயர்த்தியதன் மூலம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கூறியதாவது:-

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினரான நிலேஷ் ஷாவே, கச்சா எண்ணெய் விலை சரிவு பலனை நுகர்வோருக்கு வழங்காததால் மத்திய அரசு ரூ.3.4 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

மோடி அரசு கலால் வரி உயர்வை திரும்பப்பெற்று, கச்சா எண்ணெய் விலை சரிவு பலன்களை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இந்த வரிகளால் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளது. இதனால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்து அனைத்து பொருட்களும் விலை உயர்கிறது, பணவீக்கமும் ஏற்படுகிறது.

மோடி அரசு பதவியேற்ற 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஒரு டஜன் முறைகளுக்கு மேல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வரிகளின் மூலம் மட்டுமே மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி வசூலித்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைந்தபட்சம் 35-40 சதவீதம் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்