ஜெய்ப்பூர்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம், டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
அந்த கூட்டத்துக்கு பின்னர் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பரம ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி வழங்கப்படும், இந்த நிதி உதவி 5 கோடி குடும்பங்களுக்கு கிடைக்கும் என அதிரடியாக அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று அவர் ராஜஸ்தான் மாநிலம், சூரத்கார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசுகையில் அவர் கூறியதாவது:-
மிகுந்த வறுமை நிலையில் உள்ள ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நாடு முழுவதும் பேரொலியாக அமைந்துள்ளது. அடுத்து குண்டு வெடிக்கும். இது வறுமை மீது காங்கிரஸ் கட்சி நடத்தும் துல்லிய தாக்குதல் ஆகும். அவர்கள் (பாரதீய ஜனதா கட்சி) ஏழைகளை ஒழிப்பதற்காக வேலை செய்தார்கள். நாங்கள் ஏழ்மையை ஒழிப்போம்.
அதை எவ்வாறு செய்து முடிப்பது என்று நாங்கள் சிந்தித்தோம். விவாதங்கள் நடத்தினோம். மூளையை கசக்கினோம். குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.12 ஆயிரம் ஆக இருக்க வேண்டும் என்று கருதினோம். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த உடன் குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.12 ஆயிரம் என ஆக்குவோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 14 கோடி ஏழைகளை வறுமையில் இருந்து தூக்கிவிட்டோம். ஆனால் அவர்களை மோடி மீண்டும் ஏழைகள் ஆக்கிவிட்டார்.
21-ம் நூற்றாண்டில் நாட்டில் ஏழைகள் என்று யாரும் இருக்கக்கூடாது.
மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், கடன் தள்ளுபடி திட்டம் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட திட்டங்களையெல்லாம் மோடி அரசு கதையை முடித்துவிட்டது. மோடி ஆட்சியில் வறுமையும், வேலை இல்லா திண்டாட்டமும் பெருகிவிட்டது.
மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் முன்னணி தொழில் அதிபர்களுக்கு மோடி அரசு உதவியது. அவர்களின் ரூ.3 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.
கடந்த தேர்தலின்போது, 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தரப்படும், ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அவர் (பிரதமர் மோடி) வாக்குறுதி அளித்தார்.
ஆனால் இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படவும் இல்லை. அவர் பெரிய வாக்குறுதிகளை அளித்தார். தன் மனதில் பட்டதையெல்லாம் பேசினார்.
தன்னை பிரதமர் ஆக்க வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. தன்னை நாட்டின் காவலாளி ஆக்க வேண்டும் என்றுதான் கேட்டார். அவர் ஒருபோதும் உங்கள் காவலாளியாக இருக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் அவர் அனில் அம்பானி போன்றவர்களின் காவலாளியாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.