மும்பை,
நாட்டில் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கு கூடுதலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் சூழலில், மராட்டியம் தொடர்ந்து அதிக பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.
மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 46,781 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனினும், 58,805 பேர் குணமடைந்தது ஆறுதல் ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் 816 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்து 26 ஆயிரத்து 710 ஆகவும், மொத்த உயிரிழப்பு 78,007 ஆகவும் உள்ளது.
மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிப்புகள் குறைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா உயர்வால் கடந்த 1ந்தேதி முதல் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த சூழலில் கொரோனா பாதிப்புகளை குறைக்க மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற ஜூன் 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, மராட்டியத்திற்குள் வருபவர்கள் ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றில்லாத சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும். இந்த சான்றிதழ் மராட்டியத்திற்கு வருவதற்கு 48 மணிநேரத்திற்குள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனினும், பால் கொள்முதல், போக்குவரத்து உள்ளிட்ட நடைமுறைகள் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுகிறது.
இதேபோன்று, மருந்துகள் அல்லது கொரோனா மேலாண்மைக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை கொண்டு செல்லும் அதிகாரிகளுக்கு ரெயில், மெட்ரோ, விமான நிலையம் உள்ளிட்டவற்றில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.