புதுடெல்லி,
நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உயர்வடைந்து வரும் சூழலில், சுப்ரீம் கோர்ட்டில் 50% பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
டெல்லியிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் கொரோனா பாதிப்புக்காக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 9ந்தேதியில் இருந்து வருகிற 23ந்தேதி வரை கோர்ட்டில் விசாரணை நடைபெறாமல் காணொலி காட்சி வழியே வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான சுற்றறிக்கையும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. நாளை முதல் இந்த நடைமுறை அமலாக உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு நடப்பு 2021ம் ஆண்டில் பதிவான அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியும் என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, பிற நிலுவையிலுள்ள, அவசரமில்லாத வழக்குகள், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 22ந்தேதியில் இருந்து, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரையிலான பதிவான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.