புதுடெல்லி,
கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார்.
இதற்காக கார்த்தி சிதம்பரம் தனது அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி, வெளிநாட்டில் இருந்து முதலீட்டைப் பெற, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.3 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கில் குறிப்பிடத்தகுந்த ஆதாரம் கிடைத்ததையடுத்து லண்டனிலிருந்துன் நேற்று காலை சென்னை வந்த கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சிறப்பு பொருளாதார பிரிவு அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அவரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
விசாரணை முடிந்ததும் கார்த்தி சிதம்பரம் பாட்டியாலா கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பு மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்கள் முடிந்ததையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் கார்த்தி சிதம்பரம் தனது வழக்கறிஞரை சந்திக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்த நீதிமன்றம், வீட்டு உணவை வழங்க அனுமதி மறுத்துவிட்டது.
மேலும், கார்த்தி சிதம்பரத்துக்கு தேவையான மருந்துகளை மருத்துவ பரிந்துரை சீட்டின் அடிப்படையில் வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.