மும்பை,
சினிமா பாடலாசிரியர் ஜாவித் அக்தர்(வயது76) கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்தார். அவர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக மனுவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தனக்கு எதிரான மனு விசாரணையில், ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியதுடன், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வலியுறுத்தி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் கோர்ட்டு அவரது மனுவை நிராகரித்தது. இதையடுத்து அவர் செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த செசன்சு கோர்ட்டும் நேற்று கங்கனா ரணாவத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.