திருவனந்தபுரம்,
சமூக வலைதளம் மூலம் பழக்கமான கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் சுபி எஸ். நாயர் (வயது 32), பல் டாக்டர். இவர் வர்க்கலாவில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
சுபிக்கு சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளம் மூலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமானார்கள். அதைத்தொடர்ந்து மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுபி, கோவளம் உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
அப்போது அதை ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளார். பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி மீண்டும், மீண்டும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பிணியானார். இதை அறிந்த சுபி அவரை மிரட்டி அந்த கருவையும் கலைக்கவும் செய்து உள்ளார்.
அதன்பிறகும் கல்லூரி மாணவியை திருமணம் செய்யாமல் சுபி நாட்களை கடத்தி வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கல்லூரி மாணவி கேட்ட போது சுபி மறுத்தார். அதைத்தொடர்ந்து மாணவி விழிஞ்ஞம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி டாக்டர் சுபியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.