தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் கோர்ட்டு உத்தரவிட்டதா?

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு துபாய் கோர்ட்டு உத்தரவிட்டதா? என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.423 கோடி லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து அப்போது ராணுவ மந்திரியாக இருந்த ஏ.கே.அந்தோணி இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. விசாரணையில் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தை கடந்த 2014ம் ஆண்டில் இந்திய அரசு ரத்து செய்தது.

இந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் என்பவர் மட்டும் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை நாடின. பின்னர் அவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, விசாரணைக்காக கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை தங்களிடம் ஒப்படைக்குமாறு துபாய் அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இதுபற்றி டெல்லியில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்ட போது, இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு துபாய் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றார்.

அத்துடன் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், இந்த முன்னேற்றம் சில தலைவர்களிடம் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதை தன்னால் உணர முடிகிறது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த பிரச்சினையில் பின்னர் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், அதுபற்றி கருத்து மட்டுமே துபாய் கோர்ட்டு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

அதாவது, இங்கிலாந்தைச் சேர்ந்த இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை மூன்றாவது நாட்டுக்கு (இந்தியா) நாடு நடத்தும் பிரச்சினை பற்றி ஐக்கிய அரபு அமீரகம் கருத்து கேட்டு இருந்ததாகவும், அதற்கு அவரை நாடு கடத்துவது பற்றி துபாய் கோர்ட்டு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை, கருத்து மட்டுமே தெரிவித்து உள்ளது என்று பதில் அளித்து இருப்பதாகவும் துபாய் அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

இதுகுறித்து டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்றனர்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து தகவல் தெரிவிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்