மாண்டியா,
கர்நாடகத்தில் முன்பு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அந்த கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த புதிய அரசு நேற்று முன்தினத்துடன் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் போட்டியிட தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் தங்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய பேச்சு அடங்கிய ஆடியோ சமீபத்தில் வெளியானது.
அதில் இடம் பெற்றுள்ள எடியூரப்பாவின் பேச்சில், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தேசிய தலைவர் (அமித்ஷா) உத்தரவுப்படி மும்பையில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாத்ததும் அவரே. அவர்களின் தியாகத்தால் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. அதனால் இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் டிக்கெட் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் முதல்வர் எடியூரப்பா தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏ நாராயண கவுடா கூறும்போது, முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனக்கு கிருஷ்ணராஜ்பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாகவும், அபிவிருத்தி பணிகளுக்காக இந்த பணம் செலவிடப்படுவதாகவும் கூறியதாக கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
யாரோ ஒருவர் என்னிடம் வந்து என்னை அதிகாலை 5 மணிக்கு பி.எஸ்.எடியூரப்பாவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் (எச்.டி. குமாரசாமி அரசு வீழ்வதற்கு முன்பு). நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தபோது, எடியூரப்பா வழிபட்டுக்கொண்டிருந்தார். நான் நுழைந்ததும், அவர் என்னை உட்காரச் சொன்னார், அவர் மீண்டும் முதலமைச்சராக அவரை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நான் கிருஷ்ணராஜ்பேட்டை தொகுதியின் வளர்ச்சிக்கு ரூ .700 கோடி ஒதுக்குமாறு அவரிடம் கேட்டேன். மேலும் ரூ. 300 கோடி சேர்த்து ரூ. 1,000 கோடி ஒதுக்குவதாக கூறினார். அதன் பிறகு அந்த பணத்தையும் வழங்கினார். இவ்வளவு பெரிய மனிதரை நான் ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா, நான் செய்தேன் என கூறினார்.