புதுடெல்லி,
மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்று லண்டனில் இருந்து இணையவழியில் அமெரிக்க வாழ் இந்திய மின்னணு தொழில் நுட்ப வல்லுனர் சையது சுஜா என்பவர் கூறினார்.
இதை தொடர்ந்து ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பதில் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என கூறினர்.
எதிர்க்கட்சிகளும் பழைய வாக்குச்சீட்டு முறையையே கொண்டுவர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது:-
இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அனுமதி கோரியுள்ளது. பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப மாட்டோம். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவோம்.
அரசியல் கட்சிகள் உட்பட எந்தவொரு நபர்களிடமிருந்தும் நாங்கள் எந்தஒரு விமர்சனம் மற்றும் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். அதே நேரத்தில், நாங்கள் மிரட்டலினால் , அச்சுறுத்தலினால் அல்லது பலவந்தத்தால் வாக்குச்சீட்டு ஆவணங்களின் சகாப்தத்தை ஆரம்பிக்க போவதில்லை. வாக்குச்சீட்டு ஆவணங்களின் சகாப்தத்திற்கு நாங்கள் போகவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.