சாகும்வரை உண்ணாவிரதம்
வால்மீகி திருவிழாவையொட்டி தாவணகெரேயில் நேற்று வால்மீகி மக்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் வால்மீகி குரு பீட மடாதிபதி பிரசன்னானந்தபுரி சுவாமி பேசும்போது, "வால்மீகி சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக போராடி வருகிறோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற மார்ச் 9-ந் தேதி முதல் இதே இடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க நான் முடிவு செய்துள்ளேன். அப்போது ஒருவேளை நான் செத்தால், அதற்கு நீங்கள், நீங்கள்" என்று பேச்சை இழுத்தார்.
அப்போது உடனே அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த எடியூரப்பா குறுக்கிட்டு, "நான் இன்னும் பேசவே இல்லை. நான் என்ன பேசுகிறேன் என்பதை கவனியுங்கள். அதன் பிறகு மற்ற விஷயங்களை பேசுங்கள். அதற்கு முன்பாக இவ்வாறு பேசுவது சரியல்ல" என்று கோபத்துடன் கூறினார்.
நடிகர் சுதீப்
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாநாட்டில் நடிகர் சுதீப் கலந்து கொண்டார். அவரை பார்க்க மக்கள் இரும்பு தடுப்புகளை தாண்டி முண்டியடித்து வந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. சுதீப்பை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாநாட்டில் பங்கேற்றவர்கள், பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்து தூக்கி எறிந்தனர்.
இந்த மாநாட்டில் எடியூரப்பா பேசும்போது, "உள் இட ஒதுக்கீடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் அரசுக்கு அறிக்கை வழங்கியுள்ளார். அந்த அறிக்கையை ஆய்வு செய்துவிட்டு, வால்மீகி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கப்படும். இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும். அதனால் யாரும் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட தேவை இல்லை" என்றார்.