அகமதாபாத்,
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்கு டவ்தே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த புயல் தீவிர புயலாக மாறி, கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டிய கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. டவ்தே புயல் நேற்று அதிதீவிர புயலாக மாறியது.
டவ்தே புயல், இன்று இரவு குஜராத்தில் கரையை கடக்க துவங்கியது. குஜராத்தின் போர்பந்தர் - மஹுவா பகுதியில் புயல் கரையை கடக்கத்தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 155-165 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
முன்னெச்சரிக்கையாக மாநில அரசு, பாதுகாப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது. முன்னதாக, டவ்தே புயல் காரணமாக மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன், கனமழை பொழிந்தது. பலத்த காற்றும் வீசியது.