தேசிய செய்திகள்

மத உணர்வை புண்படுத்தல்; சிறையில் உள்ள 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனருக்கு இடைக்கால ஜாமின்

'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு ஜாமின் கிடைத்தபோதும் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக 'ஆல்ட் நியூஸ்' செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜூபைர் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 2018-ல் முகமது ஜூபைர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரியை வகையில் கருத்திருந்தார். இது மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் ஜூபைரை கடந்த மாதம் 28-ம் தேதி கைது செய்தனர். அவரை டெல்லி திகார் சிறையில் போலீசார் அடைத்தனர்.

அதேவேளை, மத உணர்வை புண்படுத்தியதாக ஜூபைர் மீது கடந்த 1-ம் தேதி உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 4-ம் தேதி திகார் சிறையில் இருந்து ஜூபைர் சீதாபூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், சீதாபூர் மாவட்டத்தில் பதியப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி முகமது ஜூபைர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முகமது ஜூபைருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக டுவிட்டரில் எந்த வித பதிவுகளையும் ஜூபைர் பதிவு செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை விதித்தது.

ஆனால், இந்த ஜாமின் உத்தரவு டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு பொருந்தாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம் டெல்லி போலீசார் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஜூபைர் சிறையில் உள்ளதால் இந்த வழக்கில் ஜாமின் கிடைத்தபோதும் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க... மத உணர்வுகளை புண்படுத்துதல்; 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் கைது