தேசிய செய்திகள்

டெல்லியில் குவியும் விவசாயிகள்: ‘நாடாளுமன்றத்தை நோக்கி செல்வதை தடுத்தால் நிர்வாணப் போராட்டம்’ தமிழக விவசாயிகள் எச்சரிக்கை

விவசாய கடன் தள்ளுபடி, விளைப்பொருட்கள் குறைந்தப்பட்ச நியாயவிலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் நாளை பேரணி நடத்துகிறார்கள்.

புதுடெல்லி,

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், அதனை கண்டித்து நாடெங்கிலும் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி டெல்லியில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்தது. விவசாய கடன் தள்ளுபடி, விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதாரவிலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தரப்பில் இரண்டு நாட்கள் டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது. நாளை வெள்ளிக்கிழமை விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

டெல்லியில் குவியும் விவசாயிகள்

அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பெரும்திரளான விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வமைப்பில் 207 அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. டெல்லியின் ராம்லீலா பகுதியில் தமிழகம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மராட்டியம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கூடுகின்றனர். ராம்லீலா மைதானத்தில் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். ரெயில்கள், பஸ்கள் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் குவிந்து வருகிறார்கள்.

டெல்லியின் ஆனந்த விஹார், நிஜாமுதீன், பிஜ்வாசன் ரெயில் நிலையம், சாப்ஜி மண்டி ஆகிய வழிகள் வழியாக விவசாயிகள் செல்வதற்கு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. இன்று மாலைக்குள் ஏறக்குறைய ஒரு லட்சம் விவசாயிகள் இந்தப் பேரணியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண் விவசாயிகளும் பெருமளவு திரண்டு வருகிறார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விவசாயிகள் பெரும்திரளாக டெல்லியில் குவிந்து வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்காக செல்கையில் பாதுகாப்பை உறுதிசெய்ய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருகும் ஆதரவு

விவசாயிகள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு குவிந்து வருகிறது. பொதுமக்களும் தங்களுடைய ஆதரவை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வ்ருகிறார்கள். விவசாயிகள் நடத்தும் பேரணியில் எல்லோரும் கலந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் விவசாயியாக இல்லையென்றாலும் கூட இந்த பேரணிக்கு ஆதரவை தரவேண்டும், என்று சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் டுவிட்டரில் கோரிக்கையை விடுத்துள்ளார். இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 15 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு அரசுகள் செய்தது அனைத்தும் துரோகம்தான். விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை தேவை, கடன் தள்ளுபடி ஆகியவற்றை வலியுறுத்தி நாளை ஒரு லட்சம் விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

பீகாரிலிருந்து பேரணிக்கு வந்துள்ள ஜாமூன் தாகூர் என்ற விவசாயி பேசுகையில்,

நாங்கள் நெல் மற்றும் சோளம் பயிரிட்டோம். நாங்கள் கடந்த சில வருடங்களாக வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற சூழ்நிலையை எதிர்க்கொண்டு வருகிறோம். எங்களுக்காக அரசு பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும். எங்களுக்காக நிதிஷ்குமார் எதையும் செய்யவில்லை. மோடியின் மீது எங்களுக்கு நம்பிக்கையிருந்தது, அவரும் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார், என கூறியுள்ளார்.

நிர்வாணப் போராட்டம்

நாடாளுமன்றத்தை நோக்கி செல்வதை தடுத்தால் நிர்வாணப் போராட்டம் நடத்துவோம் என்று தமிழக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் கலந்துக்கொள்ள சென்ற விவசாயிகள் ரெயில் நிலையத்தில் போராட்டம் மேற்கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கையில் மண்டை ஓடுகளுடன் ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றனர். கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகளைத்தான் கையில் வைத்துள்ளேன் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நாளை செல்லும் பேரணிக்கு போலீஸ் தடையை ஏற்படுத்தினால் நாங்கள் அனைவரும் நிர்வாணப் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்