புதுடெல்லி,
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த நிரவ் மோடி, நெருக்கடி மிக்க லண்டன் சிறையில் கம்பி எண்ணி வருகிறார். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்து விட்டது.
இதற்கிடையில், நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.283.16 கோடியை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியது. நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்தது.