மங்களூரு-
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.76 லட்சம் தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விமான நிலைய போலீசார் ஒரு பயணியை கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம், போதைப்பொருள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவதை தடுக்க விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஒரு விமானம் மங்களூருவுக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
தங்கம் பறிமுதல்
அப்போது 3 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் தனியாக அழைத்துச் சென்று சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களது உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் தங்களுடைய பைகள், தாங்கள் கொண்டு வந்த அட்டைப்பெட்டிகளில் பல்வேறு வடிவங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து அவர்கள் 3 பேரிடம் இருந்து ரூ.76.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் அவர்கள் 3 பேரிடமும் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
பயணி கைது
அதில் ஒருவர் தங்கத்தை கடத்த மூளையாக செயல்பட்டதும், மற்ற 2 பேரும் அவருக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து விமான நிலைய போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்த மூளையாக செயல்பட்டவரை கைது செய்தனர். மற்ற 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.