அலகாபாத்,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 70 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு பணம் அளிக்காத காரணத்தால் சிலிண்டர் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி மேலும் குழந்தைகள் பலியாகாமல் தடுத்த டாக்டர் கபீல் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். எட்டு மாதமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பல முறை ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து, 8 மாத சிறைவாசத்துக்கு பின், கபீல் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளார்.
இந்த வழக்கில், புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் மணிஷ் பண்டாரிக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த போதிலும், சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஸ்ரா உட்பட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய 7 பேரும் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.