தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் தடுப்பூசி இருப்பு இருப்பதாக அரசு நாடகமாடுகிறது: சித்தராமையா

கர்நாடகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு போதிய அளவு தடுப்பூசி இருப்பதாக நாடகமாடி வருகிறது என சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

சித்தராமையா பேட்டி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று தாவணகெரேயில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தார். அதன் பின்னர் அவர் தாவணகெரே காளியம்மன் கோவில் பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாமனூர் சிவசங்கரப்பா ஏற்பாட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

தடுப்பூசி தட்டுப்பாடு

கர்நாடகத்தில் கொரோனா பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் கொரோனா 3-வது அலை வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்த அரசு மெத்தனபோக்குடன் செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.ஆனால் கர்நாடக அரசு தடுப்பூசி போதிய அளவில் இருப்பதாக பொய் கூறி நாடகமாடி வருகிறது. தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் போராட்டம் நடத்தும் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அரங்கேறி வருகிறது. எனவே தடுப்பூசி இருப்பு விவரங்கள் குறித்து அரசு உடனே பட்டியல் வெளியிட வேண்டும். மேலும் உடனடியாக மத்திய அரசிடம் பேசி கொரோனாவில் இருந்து மக்களை காக்க தடுப்பூசிகளை கேட்டு பெற கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா விதி மீறல்

இதைதொடர்ந்து ஹரிஹரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமப்பாவின் மகள் திருமண நிகழ்ச்சியில் சித்தராமையா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.இந்த திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். ஆனால் கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் சித்தராமையா, மற்றவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் சிலர் முகக்கவசமும் அணியவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

75 சதவீத கமிஷன் அரசு

திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்த சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், மந்திரி ஸ்ரீராமுலுவின் உதவியாளர் மட்டும் அரசு பணிகளை டெண்டர் விட லஞ்சம் வாங்கவில்லை. பா.ஜனதாவினர் அனைவருக்கும் இதில் பங்கு உள்ளது. எடியூரப்பா மகன் விஜயேந்திரா உள்பட பா.ஜனதாவினர் அரசு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 75 சதவீதம் லஞ்சம்

வாங்கியுள்ளனர். இந்த அரசு 75 சதவீத கமிஷன் அரசு. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் கர்நாடக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்