தேசிய செய்திகள்

‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்தான் கொரோனா 2-வது அலைக்கு உதவின’ மன்மோகன் சிங் மீது சுகாதார மந்திரி தாக்கு

கொரோனா குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் தொடுத்த மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன், மக்களுக்கு தடுப்பூசி போடாமல், அதை விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்தான் கொரோனா 2-வது அலைக்கு உதவின என்று குற்றம்சாட்டினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். அதில், தடுப்பூசி போடுவதை அதிகரிப்பது, மருந்து வினியோகத்தை கூட்டுவது உள்ளிட்ட யோசனைகளை தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடியாக மன்மோகன் சிங்குக்கு தான் எழுதிய கடிதத்தை மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நன்றிகூட தெரிவிக்கவில்லை

மன்மோகன்சிங்ஜி, இதுபோன்ற அசாதாரண நேரத்தில், நீங்கள் கூறும் ஆக்கபூர்வ ஒத்துழைப்பையும், மதிப்புமிக்க அறிவுரையையும் உங்கள் காங்கிரஸ் தலைவர்களும் பின்பற்றினால், வரலாறு உங்கள் மீது கனிவு காட்டும்.

உங்கள் கட்சியில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும், உங்கள் கட்சி ஆளும் மாநில அரசுகளும் உங்களது கருத்தை பிரதிபலிப்பதாக தெரியவில்லை.

கடினமான சூழலில் தடுப்பூசியை உருவாக்கி உலகுக்கு அளித்த இந்திய விஞ்ஞானிகளுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஒரு நன்றிகூட தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

உயிருடன் விளையாட்டு

அதேநேரம், தடுப்பூசிகளின் திறன் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புவதில் காங்கிரஸ் கட்சியினரும், அக்கட்சி ஆளும் மாநில அரசுகளும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதன்மூலம், தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கத்தை ஏற்படுத்தி, நாட்டு மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர். தடுப்பூசி குறித்து விமர்சித்ததன் மூலம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்தான் கொரோனா 2-வது அலைக்கு உதவின.

உங்கள் கட்சியின் முதல்-மந்திரி ஒருவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் நேரடியாகவே கூறி, மோசமான உலக சாதனை படைத்துள்ளார். சில காங்கிரஸ் தலைவர்களோ, வெளியே தடுப்பூசிகளை பற்றி குறைகூறிவிட்டு, தாங்கள் மட்டும் ரகசியமாக போட்டுக்கொண்டனர்.

சொந்தக் கட்சியினருக்கு அறிவுரை

கொரோனா தடுப்பில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கு நீங்கள் உங்கள் சொந்தக் கட்சியினருக்கு ரகசியமாகக் கூட அறிவுரை வழங்கியிருக்கலாம்.

உங்களுக்கு கடிதம் எழுதிக்கொடுத்தவர்களோ அல்லது ஆலோசனை வழங்கியவர்களோ தங்கள் பணியில் பெரும் குறை இழைத்துவிட்டனர். உதாரணத்துக்கு, வெளிநாட்டு தடுப்பூசிகள் இறக்குமதிக்கு அரசு ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டதை அவர்கள் கவனிக்கவில்லை.

ஒத்துழைப்பை வேண்டுகிறோம்

இதுபோன்ற உண்மைத் தவறுகள் இருந்தாலும், நாட்டு மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். எங்களுக்கும் அதே அக்கறை இருக்கிறது என்பதை உறுதிபடுத்துகிறோம்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் உங்களின் தொடர் ஒத்துழைப்பை வேண்டுகிறோம், நீங்கள் இதுபோன்ற பல ஆலோசனைகளை வழங்குவதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது