புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்குதல் பீதி காரணமாக வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் ஹோலி கொண்டாட்டம் களையிழந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே ஹோலி கொண்டாடினர். தெருக்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பலர் ஹோலி கொண்டாட்டங்களையே தவிர்த்தனர். சிலர் நண்பர்கள், உறவினர்களுடன் கூடி வண்ணப்பொடிகள் இல்லாமல் ஹோலி கொண்டாடினர். வெகுசிலர் மட்டுமே வண்ணப்பொடிகளை பூசி கொண்டாடினர். முதல்-மந்திரி கெஜ்ரிவாலும், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடந்த மாதம் நடைபெற்ற கலவரம் காரணமாக ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்தார். சாகெட் பகுதியை சேர்ந்த ரீடா சர்மா கூறும்போது, ஈ பிளாக் சென்டிரல் பூங்காவில் ஒவ்வொரு வருடமும் ஹோலியின்போது ஏராளமான உணவு கடைகள் போடப்பட்டு இருக்கும். மக்கள் கூடி கொண்டாடுவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலால் கொண்டாட்டமே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார்.