புதுடெல்லி,
மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசினால் பொருளாதார குற்றவாளிகள் எனவும், அவர்கள் நாட்டை விட்டு தப்பிக்க முடியாதபடி லுக் அவுட் சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டு, பின்னர் இதுவரை எத்தனை நபர்கள் மீது அந்த நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டது? என்ன காரணத்தினால் திரும்பப்பெறப்பட்டது? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறும்போது, ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல்களின்படி லுக் அவுட் சுற்றறிக்கை அங்கீகரிக்கப்பட்ட தோற்றுவிப்பாளரின் வேண்டுகோளின் பெயரில் குடியுரிமை பணியகத்தால் திருத்தப்படலாம், நீக்கப்படலாம் அல்லது திரும்பப்பெறப்படலாம்.
பல்வேறு காரணங்களுக்காக, குற்றங்களுக்காக மாஜிஸ்திரேட்டு, போலீஸ் சூப்பிரண்டு, பொதுத்துறை வங்கி தலைவர் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் லுக் அவுட் சுற்றறிக்கை தொடர்பாக அறிவிக்கலாம். பொருளாதார குற்றங்கள் தொடர்பான லுக் அவுட் சுற்றறிக்கை தகவல்கள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை என்றார்.