தேசிய செய்திகள்

நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ.7,300 கோடி சம்பள பாக்கி முழுவதும் வழங்கி விட்டோம் - மத்திய மந்திரி தகவல்

நூறு நாள் வேலைத்திட்ட சம்பள பாக்கியான ரூ.7 ஆயிரத்து 300 கோடி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஊரடங்கு காலத்தில், ஏழைகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் பட்டியலிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

நூறு நாள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 300 கோடி சம்பள பாக்கி நிலுவையில் இருந்தது. அதை முழுமையாக வங்கிக்கணக்கில் செலுத்தி விட்டோம்.

இந்த நேரத்தில் இது அவசியமானது என்று மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரிகள் எனக்கு நன்றி தெரிவித்தனர்.

ஊரடங்கு அமலில் இருப்பதால், நூறு நாள் வேலைத்திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்தவுடன், பணிகளை தொடங்குவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன.

அதே சமயத்தில், தங்கள் சொந்த நிலத்தில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், சிறு, குறு விவசாயிகள், நூறு நாள் திட்டத்தின்கீழ் செய்யும் தனிப்பட்ட பணிகளை தொடரலாம். அதுபோல், குடும்பத்துக்கு ஒரே வருவாய் ஆதாரமாக உள்ள பெண்களும் தனிப்பட்ட பணிகளை செய்யலாம். நூறு நாள் வேலைத்திட்ட சம்பளம் ரூ.182-ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

20 கோடியே 39 லட்சம் பெண்களின் ஜன்தன் வங்கிக்கணக்குகளில் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா பயனாளிகளுக்கு தலா ரூ.500 வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், ஊரக வளர்ச்சித்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 14 சதவீதத்தை ஒரே மாதத்தில் செலவிட்டுள்ளோம். அத்துடன், உணவு தானியங்களும் வழங்கப்பட்டதால், ஊரடங்கால் ஏழைகளின் பாதிப்பு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்