தனோரா,
மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரியான கமல்நாத் அந்த மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். தற்போது அவர் முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் நிலையில், அந்த தொகுதியில் தனது மகன் நகுலை களமிறக்கி உள்ளார்.
மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ள கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் தனது மகன் நகுலை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த பிராந்தியத்துடன் 40 ஆண்டு காலமாக இணைந்து பணியாற்றி வருகிறேன். நீங்கள் கொடுத்த அன்பும், வலிமையும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. சிந்த்வாராவில் மக்கள் பணியாற்றும் பொறுப்பை எனது மகனிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, நகுல், நிச்சயம் உங்களுக்கு சேவையாற்றுவார். அதற்கான பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். உங்களுக்கு பணியாற்றுவதற்கு அவரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சேவையாற்றவில்லை என்றால், அவரை பிடித்து உடைகளை கிழித்து விடுங்கள் என்றும் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் சட்டசபை உறுப்பினர் ஆகாமலேயே முதல்-மந்திரி பதவியை வகித்து வரும் கமல்நாத், சிந்த்வாரா சட்டசபை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.