புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்னை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிரச்னையை சமாளிக்கும் ஒருதிட்டமாக, டெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் வகையில், ஒற்றப்படை தேதிகளில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டும் இந்த திட்டம் இரண்டு முறை அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிகுந்து கணப்படுவதால் அங்கு வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு கூறியது. இத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் டெல்லி தெரிவித்து இருந்தது.
மேலும், பெண்கள் இரு சக்கர வாகனங்கள், அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், பெண்கள், இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்க கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், பெண்களுக்கு வாகன கட்டுப்பாடு திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படாததால், அதிருப்தி அடைந்துள்ள டெல்லி அரசு, இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெல்லி போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ், இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்க மறுத்ததை மறு ஆய்வு செய்ய கோரி திங்கள் கிழமை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கைலாஷ் கால்ட் தெரிவித்துள்ளார்.