புதுடெல்லி,
டெல்லியில் நிர்பயா என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவி 2012-ம் ஆண்டு, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பு ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் உறுதி செய்யப்பட்டது.
அவர்களை கடந்த 1-ந் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வந்தன.
ஆனால் ஒவ்வொரு நாளும் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய குமார் சிங் ஆகிய 4 பேரும் மாறி, மாறி சட்ட போராட்டங்களை கையில் எடுத்து வருகின்றனர்.
அவர்கள் தங்களை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்கக்கோரி டெல்லி பாட்டியாலா செசன்சு கோர்ட்டில் வழக்கு போட்டனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மேந்திர ரானா, அவர்களை தூக்கில் போட தடை விதித்து கடந்த 31-ந் தேதி உத்தரவிட்டார். இதன் காரணமாக 1-ந் தேதி அவர்களை தூக்கில் போடுவது நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி பாட்டியாலா செசன்சு கோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில், மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தது.
உடனே இந்த வழக்கை நீதிபதி சுரேஷ் கயித் அவசர வழக்காக விசாரித்தார். தண்டிக்கப்பட்டுள்ள 4 பேரும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சட்டத்தோடு விளையாடுகிறார்கள், இவர்களை தனித்தனியாக தூக்கில் போட உத்தரவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் மற்றும் 4 குற்றவாளிகளும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், ஞாயிற்றுக் கிழமை (நேற்று ) தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று நீதிபதி சுரேஷ் கயித் அறிவித்தார்.
அதன்படி நேற்று விடுமுறை நாள் என்றபோதும் விசாரணையை நீதிபதி சுரேஷ் கயித் தொடர்ந்து நடத்தினார்.
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அவர், சட்டத்தின் உத்தரவை விரக்தி அடைய வைக்க வேண்டும் என்றே, நன்றாக திட்டமிட்டு குற்றவாளிகள் செயல்பட்டு வருகின்றனர். குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குற்றவாளிகள் தரப்பில் வக்கீல் ஏ.பி.சிங், ரெபக்கா ஜான் ஆகியோர் வாதிட்டனர்.
அவர்கள், இந்த வழக்கில் ஏன் இத்தனை அவசரம் காட்டப்படுகிறது? அவசரப்படுத்தப்படும் தீர்ப்பு, நீதியை புதைக்கும் செயல் ஆகும். 4 பேருக்கும் உரிய அவகாசம் தந்து, அவர்கள் தரப்பு நியாயங்களை முறையாக விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் எப்படிப்பட்ட கொடிய குற்றங்களை செய்ததாக ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும்கூட, அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும் என்று கூறினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.