தேசிய செய்திகள்

சுவிஸ் வங்கிகளில் கடந்த ஆண்டில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்வு

சுவிஸ் வங்கிகளில் கடந்த ஆண்டில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து உள்ளது என வெளியாகி உள்ள தகவல், மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2014ம் ஆண்டு பதவி ஏற்றது முதல் கருப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

இது தொடர்பாக சட்டம் கூட கொண்டு வந்தது.

இந்தியர்கள் பெரும்பாலும் சுவிஸ் வங்கிகள் என்று அழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்தான் கருப்பு பணத்தை பதுக்குகின்றனர். இதுபற்றிய தகவல்களை அறிய முடியாத நிலை இருந்து வந்தது.

இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து அரசுடன் மத்திய அரசு பேசி ஒப்பந்தம் போட்டது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் தொடர்பாக அந்த நாட்டின் மத்திய வங்கியான சுவிஸ் தேசிய வங்கி தாமாக தகவல்களை பரிமாறிக்கொள்கிற நிலை இப்போது வந்து உள்ளது.

இந்த நிலையில் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவிக்கு வந்த முதல் 3 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பதுக்கல் குறைந்தது.

ஆனால் கடந்த ஆண்டு, கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளது.

சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளி விவரம் மூலம் அம்பலத்துக்கு வந்து உள்ள தகவல்கள் வருமாறு:

* சுவிஸ் வங்கிகளில் 2017ம் ஆண்டில் உலகளவில் குவிக்கப்பட்ட கருப்பு பணத்தின் மதிப்பு 1.46 டிரில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.100 லட்சம் கோடி).

* இந்தியர்கள் 2017ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் நேரடியாக குவித்த கருப்பு பணம் 999 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.6 ஆயிரத்து 891 கோடி). நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் மூலம் குவிக்கப்பட்ட பணம் 16.2 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.112 கோடி).

* 2016ம் ஆண்டில் இந்தியர்கள் நேரடியாகவும், நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் மூலமாகவும் சுவிஸ் வங்கிகளில் குவித்த கருப்பு பணம் 675.8 மில்லியன் சுவிஸ் பிராங்க். இதனுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு கருப்பு பண பதுக்கல் சுமார் 50 சதவீதம் உயர்வு ஆகும்.

சுவிஸ் வங்கிகளில் 2017ம் ஆண்டு இந்தியர்கள் குவித்து உள்ள சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கான விவரம்:

* இந்திய ரூபாயாக சுவிஸ் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டது 464 மில்லியன் சுவிஸ் பிராங்க். (சுமார் ரூ.3,200 கோடி)

* பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை 152 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.1,050 கோடி)

* பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை 383 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.2,640 கோடி)

இவ்வாறு சுவிஸ் தேசிய வங்கி தகவல்கள் கூறுகின்றன.

கருப்பு பணத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்கள் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானியர்கள் 2017ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் குவித்து உள்ள கருப்பு பண பதுக்கல் 21 சதவீதம் சரிவு அடைந்து உள்ளது. ஆனால் பண மதிப்பில் பார்த்தால் இந்தியர்கள் பதுக்கியது ரூ.7 ஆயிரம் கோடி என்றால், பாகிஸ்தானியர்கள் அதை பின்னுக்குத்தள்ளி ரூ.7 ஆயிரத்து 700 கோடி குவித்து உள்ளனர்.

இது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்