தேசிய செய்திகள்

இந்தியாவில் 2024-ல் சர்வதேச சுற்றுலாவாசிகளின் வருகை 2.05 கோடியாக அதிகரிப்பு

2.05 கோடி பேர் என்ற சர்வதேச சுற்றுலாவாசிகளின் வருகையுடன் உலகளவில் இந்தியா 20-வது இடம் பிடித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் ஏற்படுவதற்கு முன்பு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையை விட 2024-ம் ஆண்டில் அவர்களின் வருகை கூடியுள்ளது.

இதன்படி, இந்திய சுற்றுலா துறையில் 2024-ல் 99.5 லட்சம் என்ற அளவில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஒட்டு மொத்தத்தில் சர்வதேச சுற்றுலாவாசிகளின் வருகை 2.05 கோடியாக உயர்ந்து இருந்தது.

இது 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 14.85 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வரிசையில் முதல் 5 இடங்களில் மராட்டியம், மேற்கு வங்காளம், குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

இதேபோன்று 2.05 கோடி பேர் என்ற சர்வதேச சுற்றுலாவாசிகளின் வருகையுடன் உலகளவில் இந்தியா 20-வது இடம் பிடித்து உள்ளது.

2023-24 ஆண்டில் சுற்றுலா துறையில் வேலைவாய்ப்பும் 8.46 கோடி அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது என மத்திய சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.