புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், கடந்த 28-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அவர் முதலில் ஒரு நாளும், பின்னர் மேலும் 5 நாட்களும், தொடர்ந்து 3 நாட்களும் சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சுனில் ராணா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை ஆடிட்டர் பாஸ்கரராமனுடன் சேர்த்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அவருடைய சி.பி.ஐ. காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையில், அமலாக்கத்துறை இதே வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், ஐகோர்ட்டில் இந்த மனுவின் மீது அடுத்த விசாரணை தேதிவரை அவரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டனர். கார்த்தி சிதம்பரத்தின் மனுவின் மீது மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இந்த மனுவின் மீதான விசாரணையை மார்ச் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மார்ச் 20 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்ததற்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், தனது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் மனுவில் தெரிவித்தார்.