பெங்களூரு,
பிரதமர் மோடி நேற்று காலை தனி விமானம் மூலம் மங்களூரு விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு நடைபெற்ற விழாவில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர், விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு கவர்னர் வஜூபாய் வாலா, முதல்மந்திரி சித்தராமையா மற்றும் உயர் அதிகாரிகள் மோடியை வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து அங்கு பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறிய கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:
காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளும், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளும் பேசுவதை போல் காங்கிரஸ் தலைவர்களும் வெட்கம் இல்லாமல் பேசுகிறார்கள்.
இது நமது ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். துல்லிய(சர்ஜிக்கல்) தாக்குதல் நடந்த பிறகு காங்கிரஸ் தலைவர்கள் ஏன் கோபமாக இருந்தார்கள் என்பது இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ராணுவ வீரர்களின் தியாகத்தில் அரசியல் செய்யும் காங்கிரசாரை கேட்டால் நாட்டிற்காக எந்த நல்ல செயலையும் செய்ய தயாராக இருப்பதாக சொல்வார்கள். நாட்டில் நடைபெற்ற பல்வேறு தேர்தல் தோல்விகளில் இருந்து காங்கிரசார் பாடம் கற்று இருப்பார்கள். அவர்கள் தங்கள் கட்சியை சரியான பாதையில் கொண்டு செல்வார்கள் என்று நான் கருதினேன்.
ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கட்சியினர் பொறுப்பற்ற முறையில் கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன். நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையில் ஒருபோதும் சமரசத்திற்கு இடம் இல்லை. நேற்று வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் திடீரென தலைகீழாக முடிவு எடுக்கிறார்கள். காஷ்மீர் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார்கள்.
முன்பு நாட்டை வழி நடத்தியவர்கள், பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் இவ்வாறு பேசுவது ஆச்சரியமாக உள்ளது. காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையோ, எதிர்பார்ப்போ இல்லை. நாட்டின் ஒற்றுமைக்காக சர்தார் வல்லபாய் படேல் முக்கிய முடிவு எடுத்தார்.
நாட்டின் நலனுக்காகவும், தாய் மண்ணிற்காகவும், காஷ்மீரில் வாழும் அப்பாவி மக்களுக்காகவும் நமது வீரர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். நமது வீரர்களின் உயிர்த்தியாகத்தில் அரசியல் செய்யும் காங்கிரசாரிடம் இருந்து நாட்டுக்கு பயன் கிடைக்குமா? என்று பெங்களூரு மக்களை பார்த்து கேட்கிறேன்.
உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தாயார்கள், உடன் பிறந்த சகோதரிகள், அவர்களின் குழந்தைகள் இதுபற்றி கேள்வி கேட்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டும். இது சர்தார் வல்லபாய் படேலின் மண். காங்கிரஸ் நினைப்பது போல் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு மோடி பேசினார்.