புதுடெல்லி:
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அவ்வகையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
பி.வி சிந்து நவீன காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 26 வயதான அவர் 2016- இல் ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், அதைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் இரண்டு தனிநபர் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார். 2019 இல் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.
விருதினை பெற்றபின் பி.வி. சிந்து கூறுகையில், "நாட்டிற்கு சிறந்த சேவை செய்ததற்காக மதிப்புமிக்க விருதை பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இது ஒரு பெருமையான தருணம். நான் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு நிறைய ஊக்கத்தை அளிக்கிறது. எனக்கு அடுத்து சில போட்டிகள் வர உள்ளன. அதில் எனது சிறப்பான பங்களிப்பை கொடுப்பேன் " என்று சிந்து கூறினார்.