தேசிய செய்திகள்

கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் மனைவி: ஆப்கானிஸ்தான் சிறையில் வாடும் கேரள பெண்ணுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு தாய் கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் மனைவியான தனது மகளுக்கு மன்னிப்பு கொடுத்து, அவரை சிறையில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தாய் கோரிக்கை விடுத்து உள்ளார்.

அரசிடம் சரணடைந்தார்

கேரளாவை சேர்ந்த நிமிஷா சம்பத் என்ற இளம்பெண், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்து தனது பெயரை பாத்திமா இஷா என மாற்றிக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும், மேலும் 19 பேருடன் சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கு அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.அங்கு அரசு படைகளுடன் நடந்த மோதலில் பாத்திமாவின் கணவர் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து பாத்திமாவும், மோதலில் கணவன்மாரை பறிகொடுத்த மேலும் 3 கேரள பெண்களும் ஆப்கானிஸ்தான் அரசிடம் கடந்த 2019-ம் ஆண்டு சரணடைந்தனர். அவர்கள் தற்போது காபூல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் அந்த பெண்கள், தாங்கள் இந்தியா திரும்ப விரும்புவதாகவும், மத்திய அரசு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஆனால் இந்த பெண்களை மீட்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் தனது மகளுக்கு மத்திய அரசு மன்னிப்பு கொடுத்து, மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாத்திமாவின் தாய் பிந்து சம்பத் கோரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஆப்கானிஸ்தான் சிறையில் வாடும் எனது மகள் உள்ளிட்டவர்கள் தொடர்பாக எந்த தகவலும் அரசிடம் இருந்து எனக்கு வரவில்லை. அவர்களை மத்திய அரசு மீட்க ஆர்வம் காட்டவில்லை என்பது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். நான் இந்த விஷயத்தில் நேர்மறையாகவே இருக்கிறேன். அத்துடன் கடவுள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர், எனது மகள் திரும்புவதற்கு ஒரு சூழலை உருவாக்குவார்.

பிரதமர் மோடி மிகவும் இரக்கம் நிறைந்த ஒரு மனிதர் என நான் கேள்விபட்டிருக்கிறேன். அவர் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவரை சந்தித்து இது தொடர்பாக மனு கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் இதற்காக எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை.மகளை மீட்டு வருவதற்கு அரசு சார்ந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் சட்ட வழிமுறைகளையும் நாடுவேன். இதற்காக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சிலரிடமும் பேசியுள்ளேன்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தொடர்பாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் மாதம் அமெரிக்க படைகள் வெளியேறியதும், தலீபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் கீழ் ஆப்கானிஸ்தான் சென்று விடும். அப்போது எனது மகளும் பயங்கரவாதிகளிடம் சிக்கி விடுவார்.எனவே எனது மகளுக்கு மத்திய அரசு மன்னிப்பு கொடுத்து அவளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இவ்வாறு பிந்து சம்பத் கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு