திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்ந்த ஹாதியா (வயது 25) என்ற பெண், மதம் மாறி ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்த விவகாரம், அங்கு பெருத்த சர்ச்சையை எழுப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, அவரது திருமணம் செல்லாது என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து ஷபின் ஜஹான், சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரிக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணான ஹாதியாவின் கருத்தை நேரில் விசாரித்து அறிய நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்தது. இதையடுத்து அவர்களது உத்தரவின் பேரில் ஹாதியா, வரும் 27ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகிறார்.
இதற்காக அவரை அவரது பெற்றோர் டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்ல நெடும்பச்சேரி விமான நிலையம் சென்றனர். அவர்களுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்கினர்.அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் அந்த பெண்ணை பேட்டி காண முண்டியடித்தனர். ஆனால் அவரை அவரது பெற்றோரும், போலீசாரும் தள்ளிக்கொண்டு உள்ளே போய் விட்டனர்.அப்போது அந்த பெண், நான் ஒரு முஸ்லிம். நான் கட்டாயப்படுத்தப்படவில்லை. நான் என் கணவருடன் வாழத்தான் விரும்புகிறேன் என்று சத்தமிட்டு கூறியவாறு சென்றார்.