புதுடெல்லி,
இந்திய கடற்படையிடம் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பல் உள்ளது. அதையடுத்து, முற்றிலும் உள்நாட்டிலேயே முதலாவது விமானம் தாங்கி கப்பலை தயாரிக்கும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு விக்ராந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இக்கப்பல், 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது. 40 ஆயிரம் டன் எடை கொண்டது. ரூ.23 ஆயிரம் கோடி செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் இக்கப்பலை ஏற்கனவே பார்த்துள்ளனர். விக்ராந்த் கப்பலை வைத்து, கடந்த ஆகஸ்டு மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், 3-வது தடவையாக நேற்று தனது சோதனை ஓட்டத்தை தொடங்கியது.
நெடுங்கடலில் பலவிதமான சூழ்நிலைகளில் எப்படி செயல்படுகிறது என்பதை கண்டறிய சிக்கலான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கப்பல், ஆகஸ்டு மாதம் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படும்.