தேசிய செய்திகள்

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியார் உள்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட 7 பேர் மீது தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகாவ் பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு மசூதி அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 101 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ராணுவ லெப்டினண்ட் கர்னல் பிரசாத் புரோகித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர் ஆகியோருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட மேலும் 8 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் ஷியாம் சாகு, பிரவீன் தகல்கி மற்றும் சிவ்நாராயண் கல்சங்ரா ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தன் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பிரசாத் புரோகித் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டு மாலேகாவ் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் லெப்டினண்ட் கர்னல் பிரசாத் புரோகித், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர், சமீர் குல்கர்னி, சுதாகர் திவிவேதி, அஜய் ரகீர்கர் மற்றும் சுதாகர் சத்துர்வேதி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், குற்றவியல் நடவடிக்கை, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்