புதுடெல்லி,
மேற்கு வங்காள சட்டசபைக்கு வருகிற 27ந்தேதி முதல் ஏப்ரல் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உள்ளது. அதேவேளையில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். சுவேந்துக்கு பதிலடி தரும் வகையில் அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று நேற்று தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார். அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்தபோது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி கொண்டு காரில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "கார் கதவு அருகே நான் நின்றிருந்தேன். அப்போது, 4, 5 பேர் என்னை தள்ளிவிட்டு தாக்கினர். என்னை சூழ்ந்து கொண்டு கார் கதவை நோக்கி தள்ளி விட்டனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் காயம் ஏற்பட்டது" என்றார். தற்போது கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், ஆரம்ப பரிசோதனையில் அவரது (மம்தா பானர்ஜி) இடது கணுக்கால், கால் மற்றும் காயங்கள், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் கடுமையான எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் 48 மணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மே 2ந்தேதி வங்காள மக்களின் சக்தியை காண தயாராகுங்கள் என்று பா.ஜ.க.வை அபிஷேக் பானர்ஜி எச்சரித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில், மே 2ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை வங்காள மக்களின் சக்தியை காண உங்களை நீங்களே (பா.ஜ.க.) தயார்படுத்தி கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று, மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மம்தா பானர்ஜியை தடுத்து நிறுத்த கோழைகள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒருவராலும் அது முடியாது. முதலில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி. நீக்கப்பட்டார்.
இதன் பின்னர் போலீஸ் டி.ஜி. நீக்கப்பட்டார். தற்பொழுது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த அனைத்து மாற்றங்களையும் மேற்கொண்ட தேர்தல் ஆணையம் அமைதியுடன் இருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
முதல் மந்திரி மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் செல்வது என்று முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரம் பற்றி அரசியல் சாசன அமைப்பிடம் கூறவுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்ட நிலையில், கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மம்தாவுக்கு ஏற்பட்ட காயம் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் வெவ்வேறு வகையில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்பொழுது, இரக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக போடப்படும் நாடகம் இது. நந்திகிராமில் போட்டியிடுவது கடினம் என தெரிந்தவுடன் தேர்தலுக்கு முன் நாடகம் போடும் திட்டத்தில் மம்தா இறங்கியுள்ளார் என கூறினார்.
அவர் முதல் மந்திரி மட்டுமின்றி, காவல் துறை மந்திரியாகவும் (உள்துறை) இருக்கிறார். வங்காளத்தின் காவல் மந்திரியுடன் போலீசார் யாரும் இல்லை என கூறுவது யாராலும் நம்ப முடியாது.
இளைஞர்கள் சிலர் முதல் மந்திரியை தள்ளி விட்டனர் என்பது நம்பமுடியவில்லை. ஒரு மாநில போலீஸ் மந்திரி தாக்கப்பட்டேன் என கூறும்பொழுது, பொதுஜனத்திற்கான சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை பற்றி எண்ணி பாருங்கள் என கூறியுள்ளார்.
இது மம்தா பலவீனமடைந்து உள்ளார் என காட்டுகிறது. அவர் நாடகம் போடுகிறார். மக்களின் உணர்வுகளுடன் விளையாட முயற்சிக்கிறார் என சவுத்ரி கூறியுள்ளார்.
ஆனால், காங்கிரசின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனந்த் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மம்தா பானர்ஜி ஜீ மீது நடந்த தாக்குதல் மற்றும் அவருக்கு காயமேற்பட்டது அறிந்து வருத்தமடைந்தேன்.
ஜனநாயகத்தில் வெறுப்பும், வன்முறையும் ஏற்று கொள்ள முடியாதது. அவை கண்டிக்கப்பட வேண்டும். மம்தா அவர்கள் விரைவில் நலம்பெற்று திரும்ப வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர், மம்தா மீது நடந்த தாக்குதல் தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் நாடகம் என கூறியநிலையில், அக்கட்சியின் மேலவை எம்.பி. வேறு வகையில் டுவிட்டர் பதிவிட்டு இருப்பது காங்கிரசில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த பிரிவு நிலையை காட்டுகிறது.