பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தார்வார் டவுன் பகுதியில் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிவமொக்காவை சேர்ந்த பிரஜ்ஜா (வயது 24) என்பவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். பிரஜ்ஜா கடந்த சில நாட்களாக தோழிகள் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து பிரஜ்ஜா விடுதிக்கு வந்தார். இதையடுத்து இரவு அவர் தனது தோழி பிரியாவுடன் உணவு சாப்பிட்டு விட்டு அறையில் தூங்க சென்றார். பின்னர் பிரியா தூங்கிய பிறகு பிரஜ்ஜா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், நேற்று காலை பிரியா எழுந்தார். அப்போது பிரஜ்ஜா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் தார்வார் உபநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பிரஜ்ஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பிரஜ்ஜா எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. காதல் விவகாரமா? அல்லது குடும்பத்தில் ஏதும் பிரச்சினையா? என்பதும் போலீசாருக்கு தெரியவில்லை. இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.