பாட்னா,
பீகார் மாநிலம் மோகாமா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. அனந்த்சிங். பாட்னா மாவட்டம் லாட்மா கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான மூதாதையர் வீட்டில் இருந்து போலீசார் ஏ.கே.47 எந்திர துப்பாக்கி மற்றும் 2 வெடிகுண்டுகள் உள்பட சில ஆயுதங்களை கைப்பற்றினார்கள்.
இதுதொடர்பாக பார் போலீஸ் நிலையத்தில் அனந்த்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பாட்னா போலீஸ் சூப்பிரண்டு கந்தேஷ்குமார் மிஸ்ரா கூறும்போது, அனந்த்சிங் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்காக கோர்ட்டில் கைது வாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 அதிநவீன துப்பாக்கி இருந்தது குறித்து சர்ச்சையான தகவல்களும் வெளியாகி உள்ளது. அவர் அந்த துப்பாக்கியை ஆயுத வினியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கினாரா? அல்லது ஜபல்பூரில் உள்ள போர்த்தளவாட தொழிற்சாலையில் இருந்து திருடப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.