மும்பை,
இந்தியாவில் கொரோனா தொற்றுகளால் அதிகம் பாதித்த மாநிலங்களில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக மராட்டியத்தில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மராட்டியத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 64 ஆயிரத்து 881 ஆக உயர்ந்து உள்ளது.
இதனால் தடுப்பூசி போடும் பணிகள் உள்பட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15ந்தேதி முதல் வருகிற 21ந்தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலானது.
இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன.
தொற்று அதிகரிப்பினை முன்னிட்டு மராட்டியத்தில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
காய்ச்சல் உள்ள நபர்களை அனுமதிக்க தடை விதிப்பது, போதிய அளவுக்கு சேனிட்டைசர்களை (கை கழுவ உபயோகப்படும் திரவம்) பல்வேறு இடங்களில் வைப்பது, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை வருகை தரும் அனைத்து வாடிக்கையாளர்களும் பின்பற்றுகின்றனர் என உறுதி செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், இவற்றை பொதுமக்களில் ஒரு சிலர் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் ஒரே நாளில் அதிக அளவாக நேற்று 5,185 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. மும்பையில் 7,500 போலீசாருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 99 போலீசார் உயிரிழந்து உள்ளனர்.
மும்பையில் முக கவசங்களை அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி மும்பை போலீசின் டி.சி.பி. சைதன்யா கூறும்பொழுது, கடந்த பிப்ரவரி 20ந்தேதியில் இருந்து இதுவரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2.03 லட்சம் பேரிடம் இருந்து முக கவசம் அணியாததற்காக ரூ.4 கோடி அபராத தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.