புதுடெல்லி,
நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்வில் உடல் இயக்க செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் குறித்து கற்பிக்கும் நோக்கில் பிட் இந்தியா இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரெஜிஜு தலைமையில் 28 நபர் குழு அமைக்கப்படுகிறது. இதில் அரசு சார்ந்த உறுப்பினர்கள் 12 பேர் இருப்பர்.
இந்த இயக்கத்தின் தொடக்க விழா, தேசிய விளையாட்டு தினமான நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. பாரம்பரிய தற்காப்பு கலைகள், விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த வண்ணமிகு விழாவில், பிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் கூறியதாவது:-
உடல் தகுதியானது, நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்து வருகிறது. இது வெறும் வார்த்தை அல்ல, மாறாக ஆரோக்கியமான மற்றும் முழுமையான வாழ்வுக்கு ஒரு முன் நிபந்தனை ஆகும். ஆனால் உடல் தகுதி பிரச்சினைகளில் பல முரண்பாடுகள் நிலவுகின்றன.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண ஒரு மனிதன் தினமும் 8 முதல் 10 கி.மீ. தூரம் நடந்தான், சைக்கிள் ஓட்டினான் அல்லது ஓடினான். ஆனால் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் மக்களின் உடல் இயக்கம் குறைந்து விட்டது. தற்போது நாம் குறைவாகவே நடக்கிறோம். நாம் நமது படிகளை செல்போன் செயலியில் எண்ணுகிறோம். போதுமான அளவுக்கு நடக்கவில்லை என்பதை அதே தொழில்நுட்பமே நமக்கு எடுத்துக்கூறுகிறது.
வாழ்க்கைமுறை கோளாறுகளால் வாழ்க்கை முறை நோய் கள் ஏற்படுகின்றன. வாழ்க்கைமுறையில் மாற்றங்களை மேற்கொண்டால், இந்த வாழ்க்கைமுறை கோளாறுகளை சரிப்படுத்த முடியும். வாழ்க்கைமுறையில் சிறிய மாற்றம் ஏற்படுத்தினால் குணப்படுத்தக்கூடிய நோய்களும் உள்ளன.
இந்த மாற்றங்கள் தொடர்பான உத்வேகத்தை மக்களிடம் ஏற்படுத்தவே பிட் இந்தியா இயக்கம் தொடங்கப்படுகிறது. இது அரசு சார்ந்த இயக்கம் அல்ல. இதற்கு ஊக்கமளிக்கும் சக்தியாக மட்டுமே அரசு இருக்கும். இந்த இயக்கத்தை அரசு தொடங்கினாலும், நீங்கள் தான் இதற்கு தலைமை தாங்க வேண்டும்.
இந்த பிரசாரத்தை நாட்டு மக்கள் முன்னெடுத்து செல்வார்கள். அதன் மூலம் வெற்றியின் சிகரத்தை எட்ட முடியும். இதற்கான முதலீடு பூஜ்ஜியமாக இருக்கும் நிலையில், பலன்களோ எல்லையற்றதாக இருக்கும் என்பதை எனது தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் சொல்கிறேன்.
வெற்றியும், உடல் தகுதியும் நெருங்கிய தொடர்பு உடையவை. வெற்றியாளர்கள் அனைவரும் சிறந்த உடல் தகுதி உடையவர்கள். உடல் தகுதியுடன் இருந்தால், மனமும் தகுதியுடன் இருக்கும்.
அந்த வகையில் இந்த இயக்கமானது ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நாட்டை எடுத்துச் செல்லும் என நம்புகிறேன். ஆரோக்கியமான இந்தியாவே எனது லட்சியம் ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றிகளை குவித்து வரும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்தும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரெஜிஜு மற்றும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிட் இந்தியா திட்டத்தை, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்த நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பு செய்யுமாறு ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் நேற்று டி.வி.க்களில் ஒளிபரப்பானது. சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பள்ளி தலைமை ஆசிரியை ராமலட்சுமி மேற்பார்வையில் அனைத்து மாணவிகளும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த பிரதமரின் பேச்சை ரசித்தனர். 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஓ.காவ்யா, பிரதமரின் இந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்து கூறினார்.