புதுடெல்லி,
நாட்டில் புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களில், ஏற்கனவே இருக்கும் பொது கட்டமைப்புகளை (பொதுத்துறை நிறுவனங்கள்) விற்பனை செய்வதும் ஒன்று என கடந்த மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
மேலும் இதற்காக புதிய திட்டம் ஒன்று (என்.எம்.பி.), உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். குறிப்பாக, முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்கு தெரிவுநிலையை வழங்குவதற்கும் ஒரு பணமாக்கல் வழிமுறையை கொண்டு வருவதற்கான திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டு உள்ள இந்த என்.எம்.பி. திட்டத்தை நிர்மலா சீதாராமன் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
தனியார் முதலீட்டாளர்களுக்கு தெரிவுநிலையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அரசின் சொத்து பணமாக்கல் திட்டத்திற்கான ஒரு நடுத்தர கால செயல் திட்டமாகவும் இந்த திட்டம் செயல்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.