டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ந்தேதி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் பா.ஜனதா சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டது. வாஜ்பாயின் இறப்பு இந்தியாவிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் அவருடைய அஸ்திக்கு மரியாதையை செலுத்தினர். சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில விவசாயத்துறை அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அஜய் சந்திரசேகர் பேசிக்கொண்டு சத்தமாக சிரிக்கும் காட்சி கேமராவில் சிக்கியுள்ளது. இருவரும் தட்டிக்கொண்டும், தழுவிக்கொண்டும் சிரிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களிலும் கண்டங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி ராமன் சிங்கும் கலந்துக் கொண்டுள்ளார். அமைச்சர்கள் சிரித்த விவகாரத்தை காங்கிரசும் விமர்சனம் செய்துள்ளது.
வாஜ்பாய் உயிருடன் இருந்த போது பா.ஜனதா மூத்த தலைவர்கள் அவரை புறக்கணித்தார்கள். இப்போது பா.ஜனதா அமைச்சர்களின் செயல்பாடு, வாஜ்பாய்க்கு அவர்கள் எப்படி மதிப்பளிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. வாஜ்பாய்க்கு அவர்களால் மரியாதை செலுத்த முடியவில்லை என்றாலும், அவமரியாதை செய்யாமல் இருக்கலாம். வாஜ்பாய் இறந்த பின்னர் முதல்-மந்திரி ராமன் சிங் மற்றும் பா.ஜனதா அன்பையும், மரியாதையும் செலுத்துவது என்பதில் ஒன்றும் கிடையாது, இதுவெறும் நாடகம் மட்டும்தான், என மாநில காங்கிரஸ் தலைவர் நிதின் திரிவேதி விமர்சனம் செய்துள்ளார்.