பல்நாடு,
ஆந்திர மாநிலம், பல்நாடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று மதிய உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சட்டெனப்பள்ளி மண்டலம் ராமகிருஷ்ணாபுரம் குருகுல பள்ளியில் மாணவர்கள் காலையில் சிக்கனும், மாலையில் கத்தரிக்காயும் சாப்பிட்டனர்.
இந்த நிலையில் முதலில் சுமார் 50 மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக புகாரளித்தனர். அவர்களைத் தொடர்ந்து, மேலும் 50 மாணவர்கள் இதே போன்று வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாரளித்தாக மாவட்ட ஆட்சியர் சிவசங்கர் லோத்தேட்டி கூறினார்.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அஜீரணக் கோளாறு காரணமாக மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம், விரிவான அறிக்கைக்காக காத்திருக்கிறது.