புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா அரக்கனின் 2-வது அலை புயலாக வீசி வருகிறது. முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆக்சிஜன் தேவைப்படவில்லை. தற்போது 2-வது அலையின்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
கடந்த அலையை விட தற்போது டெல்லியுடன் உ.பி. ம.பி., உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால், உங்கள் தேவையை பூர்த்தி செய்து ஆக்சிஜன் அதிகமான இருந்தால் எங்களுக்கு தந்து உதவுங்கள் என மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் அதே கோரிக்கையை நாட்டில் உள்ள முன்னணி தொழிலதிபர்களுக்கும் வைத்துள்ளார். ஆக்சிஜன் மற்றும் டேங்கர்கள் உங்களிடம் இருந்தால் டெல்லி அரசுக்கு தந்து உதவுங்கள். எந்த வழியாக உதவ முடியும் என்றாலும், அந்த வழியில் உதவுங்கள் என்று தொழிலதிபர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.