புதுடெல்லி,
இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து உருவாக்கி வரும், ஒளியை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை 450 கி.மீ. தொலைவுக்கும் அப்பால் உள்ள எதிரியின் இலக்கை அழிக்க வல்லது.
இவற்றை போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையிலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் செயல்பாட்டில் உள்ளன.
தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு தளவாடங்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த நிலையில் இருதரப்புக்கும் இடையே பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக பிலிப்பைன்ஸ் அரசு முதற்கட்டமாக 413 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர இந்தோனிசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளும், இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.