தேசிய செய்திகள்

நாளை பெங்களூரு வருகிறார் பிரதமர் மோடி

2 நாள் சுற்றுப்பயணமாக திங்கட்கிழமை பெங்களூரு வருகைதரும் பிரதமர் மோடி புறநகர் ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மைசூருவில் 21-ந்தேதி நடக்கும் யோகா விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.

கர்நாடகத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் மோடி நாளை வருகை

அதாவது நாளை(திங்கட்கிழமை) மற்றும் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக நாளை காலை 9.20 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகிறார். பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்திற்கு 11.55 மணியளவில் பிரதமர் மோடி வந்திறங்க உள்ளார். அங்கு அவருக்கு பா.ஜனதாவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

பின்னர் மதியம் 12 மணியளவில் எலகங்கா விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் கெங்கேரி அருகே கொம்மகட்டாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். கொம்மகட்டாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம், பிற ரெயில் மற்றும் சாலை திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கொம்மகட்டாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மதியம் 12.30 மணியில் இருந்து 1.45 மணிவரை அவர் பங்கேற்கிறார்.

அம்பேத்கர் சிலையை திறக்கிறார்

அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு மதியம் 2.20 மணியளவில் கொம்மகட்டாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் வந்து அவர் இறங்குகிறார். பின்னர் அம்பேத்கர் பொருளாதார பள்ளி வளாகம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அதன்பிறகு, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 4.50 மணியளவில் மைசூருவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.

மாலை 5 மணியில் இருந்து 6.15 மணிவரை மைசூரு மகாராஜா கல்லூரியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார். மைசூரு மகாராஜா கல்லூரியில் இருந்து சாலை மார்க்கமாக மாலை 6.20 மணியளவில் சுத்தூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு சுத்தூர் மடாதிபதியை சந்தித்து ஆசி பெறுகிறார். அதன்பிறகு, மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.15 மணிவரை சுத்தூர் மடத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

யோகாவை தொடங்கி வைக்கிறார்

பின்னர் இரவு 7.20 மணியளவில் சுத்தூர் மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார். கோவிலில் சாமி தரிசனம் மற்றும் சிறப்பு பூஜையை முடித்து விட்டு இரவு 8.10 மணியளவில் மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அந்த ஓட்டலிலேயே அவர் இரவில் தங்க உள்ளார். அதன்பிறகு, வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணியளவில் மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் உலக யோகா தினத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் அவரும் யோகா பயிற்சி மேற்கொள்கிறார்.

7.45 மணிவரை யோகா தினத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். காலை 8 மணியில் இருந்து காலை 8.20 மணிவரை மைசூருவில் நடைபெறும் கண்காட்சியை அவர் பார்க்க உள்ளார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மைசூரு விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் காலை 9.25 மணியளவில் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.

பசவராஜ் பொம்மை பார்வையிட்டார்

பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வருவதையொட்டி பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பெங்களூருவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். குறிப்பாக மைசூருவில் நடைபெறும் உலக யோகா தினத்திற்காக அங்கு அரண்மனை மைதானத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பெங்களூரு கெங்கேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியையொட்டி அங்கு நேற்று முன்தினம் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்கள். இந்த நிலையில், நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் சென்று, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூரு, மைசூரு மாவட்டத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் எஸ்.பி.ஜி.படையினர் மைசூருவுக்கு வருகை தந்துள்ளனர். அங்கு பிரதமர் மோடி செல்லும் பகுதிகளுக்கு சென்று அந்த படையினர் பார்வையிட்டதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக மைசூரு யோகா தினவிழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெங்களூருவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதாவது கர்நாடகத்தில், அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தல் குறித்து பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்