மிர்சாபூர்,
2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை சாடிய பிரதமர் மோடி, முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற விடாமல், எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன என குற்றம் சாட்டினார். இந்நிலையில் தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளின் நலன்களுக்காக திட்டங்களை நிறைவேற்றாத காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
உ.பி.யில் மிர்சாபூரை அடுத்த சாந்தைபூர் கிராமத்தில் ரூ.3,420 கோடி செலவிலான பன்சாகர் கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் மிர்சாபூர் மருத்துவ கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசுகையில், அரசியல் லாபத்திற்காக இன்று விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் காண்பித்துக் கொள்பவர்களுக்கு தங்களின் (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தின்போது விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்துவது குறித்து சிந்தித்து பார்க்க நேரமில்லை.
அவர்கள் கோப்புகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவர்கள் விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். பா.ஜனதாவின் கடந்த 4 ஆண்டு ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை 2.5 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரித்திட எனது அரசு உறுதி பூண்டு இருக்கிறது என்றார்.
விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறிவருகிறார். இதற்கு ஏற்ப இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க பல மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜனதா கூறிவந்தது. பாரதீய ஜனதா ஆட்சியில் அமர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டதைவிட, 2019 பாராளுமன்றத்துக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் புதிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையினை வழங்குவதற்கு வசதியாக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.9,000 கோடி வரை கடன் திட்டத்தினை அறிவித்தது. இந்த நிலையில் விவசாய உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.