சிறப்பு கமிட்டி கூட்டம்
தேசிய நீர் மேலாண்மை முகமையின் 35-வது ஆண்டு பொதுக்கூட்டமும், 19-வது நதிநீர் இணைப்புக்கான சிறப்பு கமிட்டி கூட்டமும் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி தலைமையில் டெல்லியில் நடந்தது. இந்த தேசிய நீர் மேலாண்மை முகமையின் நிரந்தர உறுப்பினராக முதல்-அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் உள்ளனர்.
புதுவையில் புயல், மழை வெள்ள சேத பிரச்சினையின் காரணமாக டெல்லியில் உள்ள சிறப்பு ரெசிடன்ட் கமிஷனர் கே.கே.சிங் கலந்துகொண்டு புதுவை அரசின் சார்பில் கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தில் கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை முடிவு பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆறுகளின் இணைப்பு தமிழகம் வழியாக செல்லும்போது சங்கராபரணியின் மேல்பகுதி கிளை நதியான வராக நதியையும், தென்பெண்ணை ஆற்றையும் கடந்து செல்கிறது. புதுச்சேரி பகுதிக்கு சங்கராபரணி ஆறும், தென்பெண்ணை ஆறும் பாய்ந்து வளம் சேர்க்கிறது.
ஆறுகள் இணைப்பு
எனவே புதுவை அரசு சார்பில் தென்பெண்ணை ஆற்றையும், சங்கராபரணி ஆற்றையும் இணைக்கவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தது. புதுவை பகுதிக்கு அதிக நீர் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
கோதாவரி-காவிரி இணைப்பு கால்வாய் சங்கராபரணி ஆற்றையும் தென்பெண்ணை ஆற்றையும் இணைத்தே செல்வதாக விரிவான திட்ட அறிக்கையில் காணப்படுகிறது.
எனவே இந்த திட்டம் நிறைவேறும்போது சங்கராபரணி ஆற்றின் வழியாகவும், தென்பெண்ணை ஆற்றின் வழியாகவும் புதுவைக்கு நீர் பகிர்ந்தளிக்குமாறு கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.