தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானம், மேகதாது அணை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ரபேல் போர் விமானம், மேகதாது அணை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரபேல் போர் விமான விவகாரம், மேகதாது அணை பிரச்சினை உள்ளிட்டவற்றில் மக்களவை கடந்த 12-ந் தேதி முதல் முடங்கி வருகிறது.

நேற்றும் மக்களவை கூடிய உடனேயே அ.தி.மு.க. எம்.பி.க் கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு மேகதாது அணை விவகாரத்தையும், தெலுங்குதேசம் கட்சியினர் ஆந்திர மாநிலத்துக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற பிரச்சினையையும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வழக்கம்போல ரபேல் போர் விமான விவகாரத்தையும் எழுப்பி, வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தி, கோஷங் களை முழங்கினர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் கேள்வி நேரம் முடங்கியது. அமைதியை ஏற்படுத்த முடியாத நிலையில், சபையை நண்பகல் வரை ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

மீண்டும் சபை கூடியபோது நிலைமையில் மாற்றம் இல்லை. அமளி தொடர்ந்தது. அதற்கு இடையே தேசிய வடிவமைப்பு இன்ஸ்டிடியூட் (திருத்தம்) மசோதாவை வர்த்தக துறை ராஜாங்க மந்திரி சி.ஆர்.சவுத்ரி அறிமுகம் செய்தார்.

ரபேல் போர் விமான விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுந்து, விதிமுறைப்படி எல்லா பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. அதே நேரத்தில் ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை தெளிவாக வழங்கிவிட்டது என குறிப்பிட்டார்.

சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் சபை 12-ந் தேதி முதல் முடங்கி வருவதை சுட்டிக்காட்டி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்புகிறார்கள். இந்த சபையை விட பள்ளிக்கூடங்கள் சிறப்பான வழிகளில் செயல்படுகின்றன என்று எனக்கு தகவல்கள் வருகின்றன என்று வருத்தமுடன் குறிப்பிட்டு, உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எங்கள் கட்சியும் எல்லா பிரச்சினைகளையும் விவாதிக்க தயாராக இருக்கிறது. ஆனால் ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் சபைக்கு வந்து, இதில் தனது கருத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை, என் அதிகார வரம்பில் இல்லை என குறிப்பிட்டார். ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமரசம் ஆகாமல் அமளியை தொடர்ந்தனர். அதையடுத்து சபையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவை மேகதாது அணை பிரச்சினையில், அ.தி.மு.க., தி.மு.க., உறுப்பினர்களின் அமளியால் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திபோடப்பட்டது.

மீண்டும் 2 மணிக்கு சபை கூடியபோது, கஜா, டிட்லி புயல் விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தலாம் என சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

உறுப்பினர்களை தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிரச்சினையை விவாதிக்குமாறு வலியுறுத்தினார். அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் மேகதாது பிரச்சினையில் ஆவேசமாக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 5-வது நாளாக மாநிலங்களவை முடங்கியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு