புதுடெல்லி,
நாட்டின் 69வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதேபோன்று டெல்லியின் ராஜபாதையில் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். அதன்பின் இந்திய நாட்டுக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு வழங்கப்படும் அசோக் சக்ரா உள்ளிட்ட உயரிய விருதுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து டெல்லியின் ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகச நிகழ்வுகள் நடந்தன.
குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனக்கு ஒதுக்கப்பட்ட மத்திய வரிசையில் அமர்ந்துள்ளார். அவருடன் மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்யசபையின் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் அமர்ந்து உள்ளார். அங்கிருந்தபடியே அவர் நிகழ்ச்சிகளை கவனித்து வந்ததுடன் உற்சாக குரலும் எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவருக்கு முதல் வரிசை ஒதுக்கப்படாத நிலையில், மோடி அரசானது மலிவான அரசியலை நடத்தி வருகிறது என்று நேற்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சி தலைவருக்கு முதல் வரிசை ஒதுக்கப்பட்டு வந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
#delhi #Rahulgandhi #Republicday #Congress #President